யாரையாச்சும் நம்பி ஏமாந்து போற ஆட்களை பார்த்து உலகம் தெரியாத புள்ளையா இருக்கியேடா .. ன்னு சொல்ல கேட்டிருப்போம்.. உலகம் ன்னா என்ன ? உலகத்தில் உள்ள மனிதர்கள் , நிகழ்வுகள் . மனுஷன் இந்த தருணத்துல இப்படித்தான் மாறுவான் .. இப்படியான சூழல்ல இப்படித்தான் நடக்கும் .. ஓரளவு முன்னாடியே கணிக்க முடியும்.
அந்த உலகத்தை புரிஞ்சி ஒவ்வொரு ஸ்டெப்பையும் எடுத்து வச்சோம்னா சேதாரம் இல்லாம எஸ்கேப் ஆயிடலாம் . திருமண வாழ்க்கையே வேண்டாம் . என் நண்பர்கள் போதும் . ஏற்கனவே இருக்கும் உறவுகள் போதும் . ன்னு 30 வயசுல நம்புறப்ப அதோட உண்மை நிலை என்ன ?
திருமணம் செய்ய மொத்தம் மூணு தகுதிகள் வேண்டும். இந்த மூணு தகுதி இருந்தா கட்டாயம் திருமணம் செய்யவும்.. வயது தகுதி அடைஞ்சிருக்கணும்.. பருவ வயதை அடைதல் .. ரெண்டாவது குடும்ப வாழ்வில் ஈடுபடக் கூடிய அளவு உடல் தகுதி வேண்டும்.. சில பேர் அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்டேங்குற அளவு இருப்பாங்க. அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து என்னத்துக்கு? மூணாவது இந்த சமூகத்தோடு வாழனும்.. சமூகத்தில் இருந்து விலகி துறவறம் போவாங்க.. அப்டி சன்னியாசம் போறவங்களுக்கு குடும்பம் தேவையில்லை. அப்ப சமூகத்தோடு மக்களோடு கலந்து வாழ்றவங்களுக்கு குடும்பம் தேவை.
இந்த மூணு கேட்டகிரி வந்தாலே திருமணம் செய்ய முழு தகுதியும் இருக்கு .. ஆனா அப்படி இருந்தும் வாலிப வயதில் திருமணம் வேண்டாம்னு சிலர் .. இவங்களுக்கு அறியாமை காரணம்.. உலகத்தைப் பத்தியும் தெரியல எதார்த்தத்தை பற்றியும் தெரியல. முதல் திருமணம் சரியா இருந்திருக்காது.. விவாகரத்து வாங்கி இருப்பாங்க இனிமேல் எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம் என்று சொல்வார்கள் .. விரக்தி காரணம். இவங்க இரண்டு பேருமே முழு தகுதியும் இருந்து திருமண வாழ்வை நிராகரிக்கிறாங்க.. காரணம் இதுவோ அதுவோ எதுவா இருந்தாலும் ரிசல்ட் ஒன்னு தான் கல்யாணம் வேண்டாம் என்பதில் வந்து நிற்பது.
இவர்களைப் பொறுத்தளவில் திருமண வாழ்வு ஒரு கொடுமை.. அதனால்தான் வேண்டாங்கறாங்க.. ஒரு கொடுமையிலிருந்து விலக நினைச்சு போகிற இடம் அதைவிட கொடுமையா இருந்தா ? அதான் உலகம்
வாலிப வயசுல தோல் எல்லாம் அயர்ன் பண்ணுன மாதிரி நேரா இருக்கும் போது.. உலகமே என்ஜாய் பண்ணதான், குடும்பம் ஒரு தொல்லை குடும்பம் ஒரு சுமை என்று நினைக்கும் போது திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறது புத்திசாலித்தனம் போல தோணும்.. ஆனா உலகம் இவர்கள் விஷயத்தில் எப்படி இருக்கும்.. என்னமாதிரியான முகத்தை காட்டும் ? வெறும் 25 வயசு மட்டும் இல்ல 70 வயசு வரையும் கூட இந்த உலகத்தோடு தான் வாழ வேண்டி இருக்கு
எந்தெந்த நேரத்துல மனுஷன் எப்படி மாறுவான்? எந்தெந்த நேரத்துல சீன்கள் எப்படி மாறும் ஓரளவு முன்னாடியே கணிக்க முடியும்.. சொத்து பங்குபாக பிரச்னை வரும்போது கூடப்பிறந்த ஆட்களே எதிர்ல நிப்பாங்க .. பண வரவுசெலவுல நண்பனே எதிர்ல நிப்பாங்க .. நிறைய பார்த்திருக்கலாம் .. .. ஒவ்வொரு விஷயத்திலும் இது உண்டு .இந்த மாதிரி நடந்தா இந்த மாதிரி உலகம் மாறும்.. அந்த உலகம் திருமணம் சம்பந்தமான விசயத்துல எப்படி இருக்கும் ? நம்மளை தவிர எல்லாமே உலகம் தான் .. அது யாரா வேண்ணா இருக்கலாம் .. பெத்தவர்களோ உடன்பிறந்தவர்களோ மனைவியோ கணவனோ பிள்ளைகளோ .. யாராலும் நமக்கு நல்லதோ தீங்கோ என்னவென்னாலும் நடக்கலாம் எனும்போது இதான் உலகம் அப்படிங்குற வட்டத்துக்குள்ள எல்லாருமே வருவார்கள் எல்லாமும் வரும் .
ஒரு கட்டத்துக்கு மேல உங்க கிட்ட அந்த கேள்வி கேட்காது
திருமண வயசு தொடங்கும் பருவம்.. ஏதாவது ஃபங்ஷனுக்கு போனா சொந்தக்காரங்க எல்லாம் கேப்பாங்க.. உனக்கு எப்பப்பா கல்யாணம் .. எப்ப கல்யாண சாப்பாடு போட போற.. என்னமோ நம்மள நம்பி தான் உலகமே சோத்துக்கு நிக்கிற மாதிரி அந்நேரம் அப்படி ஒரு கெத்து இருக்கும்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்ன அவசரம். இந்தக் கேள்விகளை இந்த உலகம் அந்த பருவத்துல வர்ற எல்லார்கிட்டயும் கேட்கும்.. அந்தப் பருவத்தை கடந்துட்டா கேட்க நாதி இருக்காது.. நம்மகிட்ட கேட்டுக்கிட்டு இருந்த அந்த கேள்வியை இன்னொருத்தர் கிட்ட கேட்க போயிடும்.. முதல் புறக்கணிப்பு அங்க தான் தொடங்கும் . உலகம் தர்ற மரியாதை நம்மள விட்டு விலகும்
இன்பத்தை நோக்கியே செல்லும்
எங்கே இன்பம் இருக்கோ அங்கு நோக்கி தான் மனுஷன் போவான் .. உங்களை வச்சி துன்பம் தான்னா உங்களை கைவிட்டுடுவான். பல பெத்தவங்களை பிள்ளைகள் கைவிடறது இந்த லாஜிக் தான்.. அதையும் மீறி பிள்ளைகள் பெத்தவங்கள பாக்குறது தான் பாசம்,நன்றி உணர்வு.. மறுநாள் எக்ஸாம் இருக்கும் முந்தைய நாள் கிரிக்கெட் மேட்ச் பாத்துட்டு இருந்திருப்போம்.. ஏன்னா படிப்பை விட கிரிக்கெட் நமக்கு இன்பம்.. அதை நோக்கி போனோம் .. நெருங்கிய ஒருவரின் மரணம் கூட நம்ம மனசு ரிலாக்ஸ் தேடி நகர்வதால் தான் நம்மால் அதை மறக்க முடியுது.. நாம அடுத்தவர் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கிற வரை தான் நம்ம கிட்ட வருவாங்க.. நமக்கு ஒரு துன்பம் வந்துவிட்டது எனில் அதை சரி பண்ணுவது அடுத்தவருக்கு ஒரு சுமை.. அந்த சுமையை நமக்கு தொடர்பில்லாதவர் எப்பவும் சுமக்க முடியாது.. ஒருவாட்டி ரெண்டு வாட்டி செய்யலாம் .. தொடர்ச்சியா செய்ய முடியாது ..செய்தாலும் அது மரியாதைக்குட்பட்டு இருக்காது .. நமக்குன்னு ஒரு உறவு இல்லாமல் போய்ட்டேன்னு அந்த நேரம் தோணும். ஆக நமக்கு துன்பம் வரும் நேரத்தில் கைவிடப்படும் போது தான் உலகத்தை நாம கணிச்சு வச்சது தப்புன்னு தெரிய வரும். பெத்தவங்களையே கைவிட உலகம் இதில் நாம் யாரு?
எந்த நட்பும் கடைசி வரை வராது
இன்னைக்கு திருமணம் வேண்டாம்னு நினைக்கிறவங்க பெரும்பாலும் நம்பி இருக்கிறது நட்புகளை தான்.. எந்த நட்பும் கடைசி வரைக்கும் வராது.
இருந்தும் உதவாதது வேறு .. இருக்கவே மாட்டாங்கறது வேற. இப்ப நீங்க காலேஜ் படிச்சிங்கனா உங்க ஸ்கூல் நட்பு இப்ப தொடர்புல இருக்கிறதா ? நீங்க இப்ப வேலைக்கு போறீங்க என்றால் உங்க கல்லூரி நட்பு இப்ப தொடர்புல இருக்குதா? வாழ்வாதாரத்தை தேடி ஓடும் போது தொடர்புகள் இல்லாமல் போகும்.. எல்லாருமே மேக்சிமம் அந்தந்த சூழலுக்கு தகுந்த மாதிரி தான் நட்பை ஏற்படுத்திக் கொள்வார்களே தவிர பழைய நட்போடு தொடர்பில் இருப்பது அரிது. பள்ளிக்கூடம் அங்க படிச்சதால அங்க பள்ளி நட்பு.. இதுவே வேற பள்ளிக்கூடம் படிச்சிருந்தா வேற நட்பு .. அந்தந்த இடத்தில இருக்கிறதால தான் அந்த நட்பு.. அதனால வாழ்வாதாரத்தை தேடி நகரும் உலகில் எந்த நட்பும் கடைசி வரை வராது.. யாரையும் நம்பி எந்த ரிஸ்க்கும் எடுத்துராதீங்க
காலம் போக போக அதன்பின் அறிமுகமாகும் மனிதர்கள் நெருக்கம் ஆக மாட்டாங்க
நெருக்கத்தின் அளவு எதுல தெரியும்னா பட்டப்பெயர் வச்சு கூப்பிடுறதுல இருக்கும். அடிச்சு பேசுறதுல இருக்கும் .. கட்டாயம் எல்லாருக்குமே ஸ்கூல் அளவுல ஒவ்வொரு பட்டப்பெயர் இருக்கும்.. ஸ்கூல் நட்பு போல வேற எந்த நட்பும் வராது .. அங்க நண்பர்களுக்குள் மரியாதை தேவை இருக்காது.. சமூக ஏற்றத்தாழ்வு தெரியாது .. காலேஜ் படிக்கும் போது வர்ற நட்பு பள்ளி நட்பை விட பலவீனமாக தான் இருக்கும்.. பின்பு வேலைக்கு சேரும்போது வர்ற நட்பு காலேஜ் நட்பை விட பலகீனமா தான் இருக்கும்.. ஏன் அங்கெல்லாம் மரியாதை கொடுத்து தான் பேசுவோம் .. அது நட்பு என்றாலும் அவ்வளவு நெருக்கத்தை தராது .. ஆக காலம் செல்ல செல்ல வருகிற நட்பு ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டு தான் .. சீக்கிரம் உடைந்துவிடும் சீக்கிரம் பிரிஞ்சிரும் .. எல்லாமே நட்புதான் என்றாலும் ஒரே மாதிரி கிடையாது.. மிடில் ஏஜ்ல வர்ற நட்புக்களை நம்பி நாம எதுவும் கால்குலேஷன் பண்ணிட முடியாது
யாருக்கு எப்போ முட்டும்ன்னு தெரியாது
இன்னைக்கு உங்க கூட இருக்குறவர் நாளைக்கு எதிரியா கூட ஆகலாம் .. எப்பவும் ஒருத்தன் நண்பனாவே இருப்பான் என்கிற உறுதி கிடையாது.. . நம்ம கூட தான் இருக்கான்னு நம்ம நண்பன் ன்னு நம்மோட பலவீனம் எல்லாம் அவனுக்கு தெரிய செய்திருப்போம்.. அது நாளை எதிரி ஆகும் போது வலியை தரும்.. கால்குலேஷன் தப்பாகும் தருணம்.. நட்பைப் பொறுத்தளவில் யாரோடவும் ரொம்ப நெருங்கிடவும் கூடாது யாரோடையும் ரொம்ப பகைச்சிடவும் கூடாது.. இன்றைய நண்பன் நாளை எதிரியாகலாம் இன்றைய எதிரி நாளைய நண்பனாகலாம். அதனால ஒருத்தர் எப்பவுமே நம்மோட நண்பரா தான் இருப்பார்னு வாழ்க்கை கெடுக்கிற இந்த விஷயத்திலும் முடிவெடுத்து விடக்கூடாது
விதி நொடியில் தலைகீழாகும்
விதி நாம நினைச்ச மாதிரியே நடக்காது நடக்குறது மாதிரியே தொடராது. உலகத்துடைய மிகப்பெரிய திறமையே ஏமாற்றுவது தான் .. இப்படித்தான் போகும்னு நினைப்போம் ஆனா அப்படி போகாது. ஏதோ ஒரு நம்பிக்கைல தான் இஎம்ஐ லோன் போட்டு பொருட்கள் வீடு எல்லாம் வாங்குறாங்க.. ஆனா கட்ட முடியாம ஏலத்துக்கு வரும்.. கொரோனாக்கு முன்ன வர இருந்த நிலை வேற கொரோனாக்கு அப்புறம் இருக்கிற நிலை வேற.. பல வீடுகளில் குடும்பத் தலைவர்கள் எல்லாம் இல்லாமல் போயிட்டாங்க.. நெனச்சு பார்த்திருப்பார்களா அதுக்கு முன்ன . ஒவ்வொரு செகண்டும் உலகம் புதுசு தான்.. சீட்டு கட்ட அடுக்குவதற்கு டைம் எடுக்கும் .. அது சரிய நொடி போதும் .. இங்க சந்தோஷத்தை உருவாக்குவது தான் கஷ்டம்.. எல்லாம் கலைந்துவிட பெரிய முயற்சி தேவை இல்லை.. அதனால இந்த உலகத்தை நம்பி இது இப்படித்தான் நடக்கும் இப்டியே தொடரும்னு எந்த முடிவுக்கும் வந்துட கூடாது.. ஏமாந்து தான் போவோம்
கேள்வி கேட்டு வலியை தரும்
வழக்கமாக இருக்க வேண்டியதை பற்றி உலகம் உங்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும்.. பதில் சொல்லி மாளாது .. ஸ்கூல் வயசு இருந்தா என்ன படிக்கிற என்று தான் கேட்கும்.. படிச்சு முடிச்சா என்ன வேலை பாக்குற என்று தான் கேட்கும்.. அப்பரம் கல்யாணம் ஆயிடுச்சான்னு கேக்கும்.. ஆயிட்டா குழந்தை உண்டானு கேட்கும் .. இருந்தா பதில் சொல்லிட்டு நகர்ந்துத்திடலாம்.. பதில் இல்லைனா ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மனுஷங்களிடத்தில் காரணத்தை சொல்லி மாழாது.. மனசு அளவுல சிதைச்சிடுவாங்க
பயன் இருக்கும்வரை மட்டுமே மதிப்பு
நீங்க எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி உங்களால் பிறருக்கு பயன் இல்லாத போது உங்கள் மதிப்பு போய்விடும் .... 20 வயசு பையன் .. 80 வயசு பெரியவர் .. இரண்டு பேரோட இழப்பை எடுத்துக்குவோம் .. யாருடைய இறப்புக்கு அதிகமா அழுவாங்க யாருடைய இறப்புக்கு அதிகமா கூட்டம் வரும் யாருடைய இறப்புக்கு நீண்ட நாள் நினைப்பில் வைப்பாங்க ? 80 வயசு நபர் அதிகமாக வாழ்ந்தார் அதிகமான மக்களுடன் தொடர்பில் இருந்தார்.. அதிக நினைவுகளுடன் அவர்தான் இருந்திருப்பார் .. ஆனா அவருக்கு அழ கூட மாட்டாங்க .. காரணம் என்னன்னா அவரோட தேவை முடிஞ்சு போச்சு .. இனி அவர் இருப்பவருக்கு பாரமாகத்தான் இருப்பார் .. அவரை கொண்டு எந்த லாபமும் இனி இல்லை எனும் போது அவர் போனதை வைத்து எந்த நஷ்டமும் யாருக்கும் இல்லை .. நீங்க எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி உங்களால் பிறருக்கு பயன் இல்லாத போது உலகத்துககு உங்கள் மதிப்பு போய்விடும் . ரிட்டயர்மென்ட் வாங்கிய பல ஆட்களுக்கு குடும்பத்தில் மதிப்பு என்னனு பார்த்திருக்கலாம்.
மாற்று வந்தால் மறக்கப்படுவீர்கள்
உங்க இடத்துல இன்னொருத்தரு வந்தால் நீங்க நினைக்கப்பட மாட்டீர்கள்.. நீங்க பெருசா நினைச்சது கூட உங்கள மறந்துரும். எவ்வளவு பெரிய நினைவுகளும் ரீப்ளேஸ்மென்ட் ஒன்னு வர்ற வரைதான் .. பல்வேறு இழப்புகள் மரண வலிகள் இந்த மறக்கும் தன்மையை கொண்டே சரி செய்யப்படுகிறது .
ஏமாந்தவர்கள் தலையில் தபேலா வாசிக்கும்
கேட்க நாதி இல்லைனா உலகம் உங்கள் தலையில தபேலா வாசித்துவிடும்... உங்களுக்கு கல்யாணம் ஆயிருந்தா உங்க குழந்தைகளுக்காக உங்க உழைப்பு இருக்கும். இல்லைனா யாரோ பெத்த பிள்ளைகளுக்காக உங்க உழைப்பு போயிருக்கும்.. நீங்க திருமணம் செய்யாமல் இருந்தால் உங்களுக்கான வருமானம் உங்களுக்கான சொத்து அதை அனுபவிக்க அபகரிக்க ஒரு கூட்டம் காத்துக்கொண்டு இருக்கும்... உழைக்காமல் சாப்பிட யாருக்குத்தான் வலிக்கும்? கேட்க நாதி இல்லன்னா நாம இருக்கும் போதே வேலைய காட்டிடுவாங்க .. தனியா இருக்கிறவங்களுக்கு அவர்கள் சொத்தே எதிரியாகிடும் . இவர் போனா தான் சொத்தை அனுபவிக்க முடியும் என்றால எப்ப போவார் என்று தான் பார்ப்பார்கள் .. நீங்கள் வாழ எந்த நிர்பந்தமும் சுத்தி இருப்பவர்களுக்கு இல்லை என்றால் நீங்கள் போனால் தான் கொண்டாட்டம் என்றால் நீங்கள் இருப்பது அவர்களுக்கு கஷ்டம் .. ஆக கடைசி காலத்தில் தான் திருமணம் செய்யாமல் இருந்ததன் விளைவை பலரும் உணர்வார்கள்.
திருமணம் வேண்டாம் என்கிறவங்களுக்கு உதாரணம் எப்படின்னா ஒருத்தர் ஒரு தொழிலை தொடங்குகிறார்.. ஆனா அவருக்கு தொழிலாளி மேல நம்பிக்கை இல்லை. காரணம் தொழில் கத்துக்கிட்டு எதிரில் கடை போட்டு விடுவார்களோ பயம்.. அதனால அவரே எல்லா வேலையும் பார்க்கிறார் . இதனால் என்னாகும் ? அவர் மட்டுமே உழைக்கிறதால தினமும் அவருக்கு வேலை பளு அதிகம் .. அவர் மட்டுமே உழைக்கிறதால தொழில அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியாது .. அவர் மட்டுமே உழைக்கிறதால வருமானமும் குறைவா தான் வரும் .. அதிலும் அவர் மட்டுமே உழைக்கிறதால அவர் உழைச்சா மட்டும் தான் வருமானம் .. கடை அடைச்சா வருமாணம் இல்ல.. அதனால அடுத்தவன் தொழில் கத்துக்கிடுவானோனு நெனச்சு ஆள் வைக்காமல் இருப்பது அறிவுஉடைய செயல் இல்ல . இன்னொருவர் தம் தொழிலை கற்றுக் கொள்வது சகஜம். தனக்கு எதிராக கடை போடுவது சகஜம். இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்து ஒரு தொழிலை தொடங்கினால் தான் அவரால் வேலையாட்களை வைக்க முடியும் .. எதிர்தரப்பு உருவானாலும் அதைவிட மேலாகக் கொண்டு செல்ல யோசிக்க முடியும். தொழில்ல வளர முடியும் அளவுக்கு அதிகமாக வருமானத்தை அடைய முடியும். படுத்துக்கிட்டே பணம் பார்க்கவும் முடியும்.
திருமண வாழ்வு இதுபோலத்தான் .. சில மைனசை நினைத்து நாம் வெறுத்திட முடியாது. . சில அசவுகாரியங்கள் இருக்கத்தான் செய்யும்னு முன்னரே எதிர்பார்த்து நாம செஞ்சோம்னா நம்மை அடுத்த கட்டத்தில் கொண்டு செல்லும். அதை தவிர்த்தால் நமக்கு நஷ்டத்தை தான் கொண்டு வருமே தவிர வேறு எதையும் கொண்டு வராது.
இதான் உலகம் .. இதுக்கு மேலயும் உண்டு . இந்த உலகத்தை நம்பி திருமண வாழ்வை புறக்கணித்தால் நிச்சயமாக நினைச்ச மாதிரி இருக்காது என்பது மட்டும் உண்மை . அதனால லேட் ஆயிருந்தால் கூட பரவாயில்லை.. திருமண பந்தத்தில் இணைய முயற்சி செய்யுங்கள்!
------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
--------------------------------------------------------