திருமணம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று. இதற்காக வரன் பார்க்க வீட்டுக்கு வருபவர்களை எப்படி வரவேற்பது, எவ்வாறு அவர்களை கவனிப்பது என்பது ஒரு கலை. இது வெறும் மரியாதைக்காக மட்டுமல்லாமல், இரு குடும்பங்களுக்கு இடையே ஒரு நல்ல உறவை தொடங்குவதற்கான முதல் படியாகவும் அமையும் . ஒரு சிறிய கவனிப்பு கூட அந்த சந்திப்பை மறக்க முடியாததாக மாற்றலாம். பெண்ணையே பார்க்காமல் அல்லது பையனையே பார்க்காமல் கவனிப்பை மட்டுமே வைத்து முடிவுக்கு வருவோர் பலர் உண்டு. அதனால் ஒரு வரன் பிக்ஸ் ஆகுவதில் கவனிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
1. திருமணத்துக்காக வரன் பார்க்க வீட்டுக்கு வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்பது மிகவும் முக்கியம் . நம்மளைத் தேடி அவர்கள் வருகிறார்கள் எனும் போது அவர்கள் வரவில் நமது மகிழ்ச்சியை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். இது அவர்களுக்கு ஒரு இலகுவான மற்றும் நட்பான உணர்வை ஏற்படுத்தும். மேலும் முதல் சந்திப்பிலேயே உங்கள் மீது நல்லெண்ணத்தை உருவாக்க உதவும். ஒரு சிறிய சிரிப்புடன் கூடிய "வாங்க, உட்காருங்க" என்ற வார்த்தைகள், உங்கள் விருந்தோம்பலை வெளிப்படுத்த உதவும். சிரித்த முகத்துடன் வரவேற்பது, திருமண பேச்சு வார்த்தைகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தொடக்கத்தை அமைத்து தரும். அதனால் சிரிப்பே வராவிட்டாலும் அதை இழுத்து வர முயற்சி செய்யுங்கள்.
2. வரன் பார்க்க வீட்டுக்கு வருபவர்களை மொபைல்களில் மூழ்கி கவனக்குறைவு ஏற்படாத அளவு வரவேற்பது இன்றைய காலத்தில் மிக அவசியமான ஒன்று. மொபைல் போனை நோண்டிக்கிட்டே அவர்களுடன் உரையாடக்கூடாது. மொபைல் போன்களின் பயன்பாடு நம் அன்றாட வாழ்வில் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமித்திருக்கும் நிலையில், இது போன்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் அதை ஒதுக்கி வைப்பது மரியாதையையும் அக்கறையையும் காட்டும். விருந்தினர்கள் வந்தவுடன், மொபைலை பக்கத்தில் வைத்து அதில் மூழ்குவதைத் தவிர்த்து, அவர்களை முழு கவனத்துடன் வரவேற்க வேண்டும்.அவர்களுடன் பேசும்போது கண் பார்த்து பரிமாறி பேசுவது அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதாக அமையும். மொபைலில் இருந்து சிறிது நேரம் விலகி, நேரடியாக உரையாடுவதன் மூலம், அந்த சந்திப்பு மனதுக்கு நிறைவாகவும், புரிதலுடனும் அமையும்.
3. திருமணத்திற்காக வரன் பார்க்க வருபவர்களை உபசரிக்கும் போது "நாம் செய்வது போலவே தான் நமக்கு திரும்ப கிடைக்கும்" என்ற எண்ணத்தில் உபசரிப்பது அந்த சந்திப்பை சிறப்பாக்கும். நமக்குத் திரும்ப கிடைக்கும் என்ற போது தான் பெரும்பாலானோர் சிறப்பாக செய்வார்கள். உதாரணத்துக்கு திருமணத்தில் வைக்கும் மொய்யை எடுத்துக் கொள்ளலாம். மொய் திரும்ப வர வாய்ப்புள்ள நிலையில் வைக்கும் மொய்க்கும், திரும்ப வராது என்கிற நிலையில் வைக்கும் மொய்க்கும் வித்தியாசம் இருக்கும். இதே போல தான் உபசரிப்பும். நீங்கள் செய்யும் சிறப்பான உபசரிப்பு திரும்ப உங்களுக்கும் வரும். ஆக தேநீர் அல்லது சிறு தின்பண்டம் கொடுக்கும் போது, அதை வெறும் பழக்கமாக செய்யாமல், "இதை சாப்பிடுங்க, உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்" என்று சொல்லி அவர்களை மகிழ்விக்க முயலலாம். இப்படி உண்மையான அக்கறையுடன் செய்யப்படும் உபசரிப்பு, புன்னகையுடன் இணைந்தால், இரு தரப்பினருக்கும் இடையே ஒரு அழகான பிணைப்பை உருவாக்கும்.
4. வரன் பார்க்க வருபவர்களை வரவேற்கும் போது, வீட்டின் சூழலை சௌகரியமாக வைப்பது மிக முக்கியம், அதற்கு ஃபேன் மற்றும் ஏசி போட்டு இடத்தை தயார் செய்வது அவசியமாகிறது. விருந்தினர்கள் வந்து சேரும் போது, வெப்பமோ அல்லது மூச்சுத்திணறலோ இல்லாமல், காற்றோட்டமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கோடை காலமாக இருந்தால் ஏசியை ஆன் செய்து, அறையை முன்கூட்டியே குளிர்வித்து வைப்பது இன்னும் சிறப்பு. இப்படி இடத்தை சௌகரியமாக்குவது, விருந்தினர்களை பதட்டமின்றி உரையாட அனுமதிப்பதோடு, உங்கள் விருந்தோம்பல் திறனையும் பறைசாற்றும்.
5. வரன் பார்க்க வருபவர்களை உபசரிக்கும் போது, நம்மில் மூத்தவர்கள் இருப்பது உபசரிப்புக்கு மேலும் மதிப்பு சேர்க்கும். வீட்டின் பெரியவர்கள், தங்கள் அனுபவத்தாலும் பக்குவத்தாலும், விருந்தினர்களை கனிவுடன் வரவேற்பதோடு, அவர்களுடன் சரியான உரையாடலை நடத்தி மரியாதை செலுத்த முடியும். மாறாக, சிறியவர்களை மட்டும் கொண்டு உபசரிப்பது, வந்தவர்களை அறியாமலேயே சிறுமைப்படுத்துவது போல உணரலாம். ஏனெனில், அவர்கள் இது ஒரு முக்கியமான சந்திப்பு என்பதை உணர்ந்து, அதற்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனவே, குடும்பத்தில் மூத்தவர்கள் உபசரிப்பில் ஈடுபடுவது, சந்திப்புக்கு மரியாதையையும் சிறப்பையும் சேர்க்கும்.
6. வரன் பார்க்க வருபவர்களுக்கு உபசாரம் செய்யும் போது, "எடுத்து சாப்பிடுங்க, இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க" என்று ஊக்கப்படுத்துவது மிகவும் அவசியம். புதிய இடத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு, தயக்கமோ கூச்சமோ இருக்கலாம். அவர்களாக முன்வந்து எடுத்து சாப்பிட தயங்கலாம். அப்போது, "இந்த பலகாரம் ருசியா இருக்கும், கொஞ்சம் எடுத்து பாருங்க" அல்லது " சாப்பிடவே மாட்டேங்கிறீங்க இன்னும் கொஞ்சம் எடுங்க" என்று அன்போடு சொல்வது அவர்களை சௌகரியமாக உணர வைக்கும். இது அவர்களுக்கு உங்கள் வீட்டில் வரவேற்பு உள்ளதாகவும், அவர்களை மதிக்கிறீர்கள் என்பதையும் உணர்த்தும். "போதும்" என்று அவர்கள் சொல்லும் வரை, அவர்களுக்கு பிடித்தவற்றை சிறிது சிறிதாக பரிமாறி, அவர்களை மகிழ்ச்சியாக உண்ண ஊக்குவிப்பது, உபசரிப்பின் அழகை மேலும் சிறப்பாக்கும். இப்படி செய்வது, வந்தவர்களின் மனதில் ஒரு நல்ல பதிவை ஏற்படுத்தும்.
7. வந்த அனைவருக்கும் உட்காரும் இடத்தை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒரு பண்பு. விருந்தினர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன், அவர்கள் அனைவருக்கும் சௌகரியமாக அமர இடம் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே பார்த்து தயார் செய்ய வேண்டும். "வாங்க, இங்க உட்காருங்க" என்று ஒவ்வொருவருக்கும் இடம் காட்டி, "எல்லாரும் சௌகரியமா உட்கார்ந்திருக்கீங்களா?" என்று கேட்டு உறுதி செய்வது அவர்களுக்கு உங்களின் மரியாதையையும் அக்கறையையும் சொல்லும் . சோஃபா, நாற்காலி அல்லது தரையில் பாய் விரித்து இருந்தாலும், எல்லோருக்கும் இடம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்வது அவசியம். யாராவது நின்று கொண்டிருப்பதை தவிர்ப்பதும் , அவர்களை சங்கடப்படுத்தாமல் இருக்கவும் உதவும்.
8. விருந்தினர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை வீட்டு குழந்தைகளுக்கு முன்கூட்டியே கற்றுக் கொடுத்திருப்பது அவசியம். குழந்தைகள் இயல்பாகவே சுறுசுறுப்பாகவும் சுதந்திரமாகவும் இருப்பார்கள், ஆனால் அவர்களுக்கு "வாங்க" என்று சொல்லி வரவேற்ப்பது, புன்னகையுடன் பேசுவது, அல்லது தேவைப்படும் போது தண்ணீர், தட்டு கொடுப்பது போன்ற சிறிய உதவிகளை செய்ய கற்றுக் கொடுக்கலாம். "பெரியவங்க வந்தா சத்தம் போடாம இருக்கணும், அவங்க கேட்டா மரியாதையா பதில் சொல்லணும்" என்று அறிவுறுத்துவது நல்லது. இது விருந்தினர்களுக்கு வீட்டில் ஒழுக்கமும் பண்பும் இருப்பதை உணர்த்துவதோடு, குழந்தைகளும் இப்படியான முக்கிய சந்தர்ப்பங்களில் சரியாக நடப்பது எப்படி என்பதை புரிந்து கொள்வார்கள். இப்படி பயிற்சி அளிப்பது, உபசரிப்பை மேலும் சிறப்பாக்கி, வந்தவர்களுக்கு நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும்.
9. வருபவர்களின் தேவைகளை அவர்களாக வெளிப்படையாகக் கேட்பதற்கு முன்பே, நாமே புரிந்து அதை நிறைவேற்றுவது உபசரிப்பில் உள்ள நுணுக்கமான அக்கறையைக் காட்டும். சிலருக்கு வெந்நீர் தேவைப்படலாம், சிலருக்கு தேனீரில் சர்க்கரை குறைவாகவோ அல்லது பிரஷர் இருப்பதால் குறிப்பிட்ட உணவு தவிர்க்கப்பட வேண்டியதாகவோ இருக்கலாம். உதாரணமாக, "உங்களுக்கு வெந்நீர் வேணுமா, இல்ல சாதாரண தண்ணீர் போதுமா?" என்று முன்கூட்டியே கேட்டு வைப்பது அல்லது "சர்க்கரை கம்மியா போடட்டுமா, உங்களுக்கு பிரஷர் இருக்கா?" என்று அவர்களின் நலனில் அக்கறை காட்டுவது அவர்களை சௌகரியமாக உணர வைக்கும். அவர்கள் தயங்கி கேட்காமல் இருக்கலாம் என்பதால், நாமாகவே "இது உங்களுக்கு ஏத்த மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன்" என்று சொல்லி பரிமாறுவது நல்லது. இப்படி அவர்களின் தேவைகளை முன்னுணர்ந்து செயல்படுவது, உங்கள் விருந்தோம்பலை மிக உயர்ந்த மட்டத்தில் வெளிப்படுத்தும்.
10. வருபவர்களுக்கு வீட்டை சுத்தி பார்க்க வேண்டும் என்று தோன்றலாம்; அப்போது ஒருவரை அழைத்து சென்று, கழிவறை மற்றும் குடிநீர் எங்கு இருக்கிறது என்பதை முன்கூட்டியே காட்டுவது நல்லது. பலருக்கு கழிவறை எங்கே என்று கேட்க கூச்சமாகவோ அல்லது தயக்கமாகவோ இருக்கும், குறிப்பாக புதிய இடத்தில். இதை ஒரு சாதாரண உரையாடலாக செய்தால், அவர்கள் தேவைப்படும் போது தயங்காமல் பயன்படுத்த முடியும். இப்படி முன்னெச்சரிக்கையாக செய்வது, விருந்தினர்களின் தேவைகளை புரிந்து, அவர்களுக்கு மரியாதையும் வசதியும் செய்யும் உங்கள் அக்கறையை வெளிப்படுத்தும்.
11. உபசரிப்பு செய்யும் போது, அது பெரிய ஆட்களிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான பண்பு. வந்தவர்களில் மூத்தவர்கள் அல்லது குடும்பத்தலைவர்களை முதலில் வரவேற்பதும், அவர்களுக்கு முதலில் உணவு அல்லது பரிமாற்றம் செய்வதும் மரியாதையின் அடையாளமாகும். குடும்பத்தில் ஒழுக்கமும் மரியாதையும் இருப்பதை காட்டும். இது வந்தவர்களுக்கு தாங்கள் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துவதோடு, உபசரிப்புக்கு ஒரு சிறப்பான ஒழுங்கை கொண்டு வரும். பெரியவர்கள் தொடங்கிய பிறகு, படிப்படியாக மற்றவர்களுக்கு பரிமாறுவது இயல்பாகவும் மரியாதையாகவும் அமையும். இப்படி செய்வது, சந்திப்பை மேலும் மதிப்புமிக்கதாக மாற்றும்.
12. பார்த்துவிட்டு கிளம்பும்போது அவர்களிடம் "எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்க" என்று கேட்பது ஒரு அழகான மரியாதையையும் ஆன்மிக உணர்வையும் வெளிப்படுத்தும். இது குடும்பத்தின் பண்பாடு மற்றும் மதிப்புகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு வழியாகவும் அமையும். விருந்தோம்பலுக்கு ஒரு தனித்துவமான முத்திரையை பதிக்கும்.
ஆக இப்படியான அம்சங்கள் உங்கள் மீதான மதிப்பை அதிகரித்து உங்கள் வீட்டில் சம்பந்தம் பண்ண அவர்களைத் தூண்டும். நல்ல உபசரிப்பு ஒரு மயக்கும் மந்திரம்!
---------------------------------------------------------
அல்மஹ்ர் முஸ்லிம் மேட்ரிமோனி
மணமகளுக்கு முற்றிலும் கட்டணம் இல்லை
Whatsapp : 9789271238
----------------------------------------------------------